சென்னை ரயில்வே கோட்டம் பொதுமக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தண்டவாளங்கள் மற்றும் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளங்களுக்கு மேலே செல்லும் மின்சாரக் கம்பிகளில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்கிறது. பட்டம் விடும்போது அதன் நூல் எதிர்பாராதவிதமாக அந்தக் கம்பிகளில் சிக்கினால், அந்த மின்சாரம் நூல் வழியாகப் பாய்ந்து பட்டம் விடுபவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விளையாட்டுக்காகச் செய்யும் இந்தச் செயல், உயிரைப் பறிக்கும் விபத்தாக மாறக்கூடும் என்பதால், தண்டவாளங்களுக்கு அருகில் பட்டம் விட வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மீறி இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சட்டத்தின்படி, இவ்வாறு தண்டவாளங்கள் அருகே பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ அல்லது ரூ.1000 அபராதமோ விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
