டெல்லியின் துவாரகா பகுதியில் தங்க நகைகளுக்காகச் சொந்த நண்பரையே படுகொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்தீஸ்கர் பவன் உணவகத்தை நடத்தி வந்த அனுரூப் குப்தா என்பவர், அதிகப்படியான தங்க நகைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த அவரது நண்பர்கள், கடந்த பிப்ரவரி 18-ம் தேதி அவரை ஒரு வாடகை அறைக்கு அழைத்துச் சென்று, பணம் கேட்டு மிரட்டி ஒரு பெண் உட்பட நான்கு பேர் சேர்ந்து அவரைக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலைச் சிதைத்து மூட்டைகளில் கட்டி, பிருந்தாவன் அருகே உள்ள யமுனை ஆற்றில் வீசி எறிந்தனர்.

கொலை செய்த பிறகு அனுரூப் உயிரோடு இருப்பது போலக் காட்டிக்கொள்ள, அவரது மொபைல் போனைப் பயன்படுத்தி உறவினர்களுக்குத் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளனர். பிப்ரவரி 23-ம் தேதி அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய டெல்லி போலீஸார், சிசிடிவி காட்சிகள் மற்றும் ஒரு ஸ்கூட்டரின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனர்.

தற்போது நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, யமுனை ஆற்றிலிருந்து அனுரூப்பின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. வெறும் தங்க நகை ஆசையினால் அரங்கேறிய இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.