அணு ஆயுத தயாரிப்பு மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடக்கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை ஈரான் ஏற்க மறுத்த நிலையில், அந்நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் காமேனியின் மகள் மற்றும் உறவினர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்தை அடுத்து ஈரானில் நாற்பது நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச தலைவர் காமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானின் முக்கிய வழிபாட்டுத் தலமான ஜம்கரன் மசூதியின் கோபுரத்தில் சிவப்பு நிறக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஈரானிய கலாச்சாரப்படி மசூதியின் மேல் பறக்கவிடப்படும் இந்த சிவப்பு கொடியானது கடும் கோபத்தையும் பழிதீர்க்கும் லட்சியத்தையும் குறிப்பதாக கருதப்படுகிறது.
தங்களின் தலைவரை இழந்த ஈரானிய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த கொடி ஏற்றப்பட்டிருப்பது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளதால் மத்திய கிழக்கு ஆசியாவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
