சென்னையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பைக் திருட்டுச் சம்பவங்களில் சிறுவர்கள் அதிகளவில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் ‘ஜாலி’ பயணங்களுக்காகவும், பெட்ரோல் தீரும் வரை ஊர் சுற்றவும் சிறுவர்கள் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களைத் திருடி வந்துள்ளனர்.

மேலும் கள்ளச் சாவிகளைப் பயன்படுத்தியும் அல்லது பூட்டப்படாத வாகனங்களைக் குறிவைத்தும் திருடும் இந்தச் சிறுவர்கள், அதில் பெட்ரோல் இருக்கும் வரை நகரின் பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பெட்ரோல் தீர்ந்தவுடன் அந்த வாகனத்தை ஏதேனும் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் மற்றொரு வாகனத்தைத் திருடித் தங்களது பயணத்தைத் தொடர்வதை ஒரு விளையாட்டாகவே இவர்கள் செய்துள்ளனர்.

இந்தச் சிறுவர்கள் எவ்வித பெரிய குற்ற நோக்கமும் இன்றி, வெறும் பொழுதுபோக்கிற்காகவும் தற்காலிகத் தேவைகளுக்காகவும் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், சில நேரங்களில் கைதான சிறுவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடிய பைக்குகளைச் சொற்ப விலைக்கு மெக்கானிக்குகளிடம் விற்பனை செய்வதும், அந்தப் பணத்தைக் கொண்டு போதை பழக்கங்களுக்கு அடிமையாவதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் இவர்களைக் கண்டறியும் காவல்துறையினர், இவர்களைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் ஒப்படைத்து வருகின்றனர். இத்தகைய குற்றங்களைத் தடுக்கப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதோடு, வாகன உரிமையாளர்கள் தகுந்த பாதுகாப்புடன் வாகனங்களை நிறுத்த வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.