டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் சயீம் அயூப் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய வேகமான பந்தை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 7 ரன்களில் அவர் வெளியேறியது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அவர் அவுட்டானபோது, விரக்தியில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது தலையைத் தாமே பிய்த்துக்கொண்ட வீடியோவும் வைரலாகி வருகிறது. தொடர்ச்சியாக சொதப்பி வரும் இவரை ஏன் இன்னும் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
சயீம் அயூப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் மிகவும் மோசமாக உள்ளன. கடந்த 14 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பதோடு, நான்கு முறை ரன் ஏதும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆகியுள்ளார். அவரது சராசரி வெறும் 9.2 ஆக மட்டுமே உள்ளது.
இந்த உலகக் கோப்பையில் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் அவரால் பவர்பிளே ஓவர்களைத் தாண்டி நிலைத்து நின்று ஆட முடியவில்லை. பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டக்காரர்களில் பல மாற்றங்களைச் செய்தும், சயீம் அயூப் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தவறி வருவது அந்த அணிக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
