அமெரிக்க நிதி மேலாளரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் மரணமடைந்த சம்பவம் உலகையே உலுக்கியது. சிறை அதிகாரிகளால் இது ஒரு தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பலரும் சந்தேகித்து வந்தனர்.

இது குறிப்பாக, எப்ஸ்டீனின் செல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைகளில் ஏற்பட்ட குளறுபடிகள், இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தின. இந்நிலையில், எப்ஸ்டீனின் உடற்கூறு பரிசோதனையை நேரில் பார்வையிட்ட பிரபல மருத்துவர் மைக்கேல் பேடன் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் மருத்துவர் பேடன் தனது அறிக்கையில், எப்ஸ்டீனின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயங்களின் தன்மை, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை விட, யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளையே அதிகம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறைச்சாலையில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய ஆவணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மரணம் குறித்து மீண்டும் ஒரு ஆழமான விசாரணை தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார். இவரின் இந்த அதிரடி கருத்துக்களால் எப்ஸ்டீன் வழக்கு மீண்டும் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.