மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் காவலர்களின் வீடுகளை மட்டுமே குறிவைத்துத் திருடி வந்த மர்ம நபரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபேஷ் என்ற அந்த நபர், கடந்த ஜனவரி மாதம் காண்ட்வா ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள 2 காவலர்களின் வீடுகளில் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பர்ஹான்பூர் நோக்கி அவர் தப்பிச் செல்ல முயன்றபோது, கட்டிடத்தின் கூரையிலிருந்து குதித்து காயமடைந்த அவரை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட தீபேஷிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு காவலர் ஒருவரால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில், பழிவாங்கும் நோக்கோடும் காவலர்களின் வீடுகளை மட்டுமே அவர் குறிவைத்துத் திருடி வந்துள்ளார்.

இதற்காகப் பகல் நேரங்களில் தெருவோர வியாபாரி போல வேடமிட்டு காவலர் குடியிருப்புகளை நோட்டமிட்டு வந்துள்ளார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் இருவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.