வயதான தாயின் மீது ஒரு மகன் காட்டிய அளவற்ற பாசம், சமூக வலைதளங்களில் பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த எக்ஸ் (X) பதிவில், ஒரு நபர் தனது சைக்கிளின் பின்னால் அமர்ந்திருக்கும் முதிய தாயார் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, தனது இடுப்போடு சேர்த்து ஒரு துண்டால் தாயை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. வறுமை வாட்டினாலும், தாயைப் பாதுகாப்பதில் அவர் காட்டும் அந்தத் தீவிரமான அக்கறை பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.

​இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “அவருக்கு அந்தச் சைக்கிளே விலை உயர்ந்த சொகுசு கார், அம்மாவே அவரின் உலகம்” என்று மனமாரப் பாராட்டி வருகின்றனர். பெற்றோரை முதியோர் இல்லங்களில் விடும் இன்றைய காலக்கட்டத்தில், ஒரு மகன் தனது தாயை இவ்வளவு பத்திரமாகச் சுமந்து செல்வது மனிதாபிமானத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது. பணத்தை விட பாசமே பெரியது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, லட்சக்கணக்கான இதயங்களை வென்று இணையத்தில் வைரலாகி வருகிறது.