மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கடலோரச் சாலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மெல்லிசை சாலை’ அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஒர்லி நோக்கிச் செல்லும் 500 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாதையில், ஹங்கேரி நாட்டின் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இசை ஒலிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் ஜப்பான், ஹங்கேரி, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, இத்தகைய தொழில்நுட்பம் கொண்ட 5-வது சாலையாக மும்பை கடலோரச் சாலை திகழ்கிறது. இந்த இசை சாலையை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.
வாகனங்கள் இந்தப் பாதையில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்போது, டயர்களுக்கும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமான ரம்பிள் பட்டைகளுக்கும் இடையே ஏற்படும் உராய்வின் காரணமாக ‘ஜெய் ஹோ’ என்ற தேசபக்தி பாடல் தானாகவே ஒலிக்கிறது. வாகனத்தின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு இந்தப் பாடல் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்தப் புதிய முயற்சி வாகன ஓட்டிகளிடையே மிகுந்த உற்சாகத்தையும் தேசபக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இசை சாலையின் வெற்றியைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் மற்ற முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இத்தகைய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொறியியல் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் இந்தச் சாலை, மும்பைவாசிகளுக்கு ஒரு புதிய மற்றும் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
