டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், அந்த அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அடுத்த போட்டியில் அவர் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்துக்கு எதிராக 148 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, கடைசி நேரத்தில் ஃபஹீம் அஷ்ரபின் அதிரடியால் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றது. 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து பாபர் அசாம் ஆட்டமிழந்தது, அணியின் வெற்றிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி, யூடியூப் நேர்காணல் ஒன்றில் பாபர் அசாம் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “அமெரிக்காவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பாபர் அசாம் விளையாடமாட்டார் என நான் கருதுகிறேன். பயிற்சியாளர் மைக் ஹெசனின் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்தபோது, பாபரை மீண்டும் 4-வது வரிசையில் களமிறக்க அவர் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

பாபர் அசாமின் பேட்டிங் முறை குறித்து மேலும் விமர்சித்த பாசித் அலி, “ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பாபரை நீங்கள் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் நான் ஒப்புக்கொள்வேன். ஆனால் டி20 போட்டிகளில் அவர் எப்படி சூப்பர் ஸ்டார் ஆக முடியும்? தான் 4-வது வரிசை வீரர் இல்லை என்பதைக்கூட நிர்வாகத்திடம் சொல்லத் தெரியாத ஒரு பேட்டராக அவர் இருக்கிறார். அவரது ஆட்டமுறை டி20 போட்டிக்குச் செட் ஆகாது” என்று விளாசியுள்ளார்.

தற்போது கேப்டன் சல்மான் அலி ஆகா 3-வது வரிசையில் சிறப்பாக ஆடி வரும் நிலையில், 4-வது வரிசையில் பாபர் திணறி வருகிறார். அவருக்குப் பதிலாக ஷதாப் கான், உஸ்மான் கான் அல்லது சயிம் அயூப் போன்ற அதிரடி வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும் உலகக் கோப்பை போன்ற முக்கியத் தொடரில், தனது நட்சத்திர வீரரையே நீக்கும் முடிவை பாகிஸ்தான் எடுக்குமா என்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.