மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்கா தனது ஆபிரகாம் லிங்கன் போர் கப்பலை ஈரான் எல்லைக்கு அருகில் நிலைநிறுத்தியுள்ளது. நடமாடும் ராணுவத் தளம் என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன கப்பல் தற்போது ஓமன் அருகே அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள தற்போதைய ஆட்சி அதிகாரத்தை பலவீனப்படுத்த அமெரிக்கா நீண்டகாலமாக முயன்று வரும் நிலையில் இந்த முறை பிரிட்டன் தனது டைபூன் ரக போர் விமானங்களை இப்பகுதியில் நிறுத்தி அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்துள்ளது.
அதே சமயம் இஸ்ரேல் நாட்டின் உதவியுடன் ஈரானை சுற்றி வளைக்க அமெரிக்கா திட்டமிட்டு வரும் சூழலில் ஈரான் அதிபர் சமரசத்திற்கு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். ஈரான் தனது தரப்பிலிருந்து அமெரிக்காவின் மிரட்டல்களை எதிர்கொள்ள ஏமன், லெபனான் மற்றும் ஈராக் ஆகிய மூன்று நாடுகளின் ஆதரவை முழுமையாகப் பெற்றுள்ளது.
ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக வரும் அமெரிக்க கப்பல்களைத் தாக்கத் தயாராக இருப்பதாகவும் லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பு ஈரான் மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளன. மேலும் ஈராக் நாட்டின் ஆதரவும் ஈரானுக்கு இருப்பதால் அந்த வழியாக அமெரிக்கா ஊடுருவுவது கடினமாகியுள்ளது.
தனது புரட்சிகர காவல்படை வீரர்களை ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் ஈரான் குவித்துள்ளதால் சர்வதேச வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
