திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் அடுத்தடுத்து நான்கு நிறுவனங்களின் பூட்டை உடைத்து, முகமூடி அணிந்த மர்ம கும்பல் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருப்பூர் கல்லூரி சாலை, அணைப்பாளையம் பகுதியில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் உப-நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள், நிறுவனத்தின் முன்பக்கப் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அதே பகுதியில் உள்ள மேலும் மூன்று நிறுவனங்களிலும் இதேபோன்று பூட்டுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பது தெரியவந்தது. ஒவ்வொரு நிறுவனத்திலும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணத்தை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல், கையில் இரும்பு ராடு மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவது பதிவாகியுள்ளது. இந்த கும்பல் மிகவும் திட்டமிட்டு அடுத்தடுத்த நிறுவனங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
ஆயுதங்களுடன் முகமூடி கும்பல் நடமாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக, இந்த முகமூடி கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டும்” எனத் தொழில் அதிபர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
