சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பயணி ஒருவர், துணிகளை உலர்த்துவதற்காக மேற்கொண்ட விபரீத முயற்சி அவருக்குப் பெரும் பண இழப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி அறையில் உள்ள தீயணைப்புத் தானியங்கி நீர் தெளிப்பான் கருவியைத் துணி மாட்டும் கொக்கியாகத் தவறாகக் கருதி, அதில் தனது ஈரமான துணிகளை அந்த நபர் தொங்கவிட்டுள்ளார்.

 

துணிகளின் எடையைத் தாங்க முடியாமல் அந்தக் கருவியின் வெப்ப உணர்வி உடைந்ததால், அதிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பீறிட்டு வெளியேறி அறையை முழுவதுமாக நனைத்தது. இந்தத் தண்ணீர் மற்ற தளங்களுக்கும் பரவி அங்கிருந்த மின்சாதனங்கள், தரைவிரிப்புகள் மற்றும் சுவரொட்டிகளைப் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கியது.

இந்த கவனக்குறைவான செயலால் ஏற்பட்ட இழப்பிற்காக, அந்தப் பயணி சுமார் ஒன்றரை லட்சம் யுவான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் பதினெட்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வைரலாகி வருகிறது.