திருமணம் முடிந்த வெறும் 65 நாட்களில் பிரிந்த ஒரு தம்பதியினர், கடந்த 13 ஆண்டுகளாக ஒருவர் மீது ஒருவர் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தை போர்க்களமாக மாற்றிய விசித்திரமான சம்பவம் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

2012-ல் திருமணமான இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த பிறகு டெல்லி மற்றும் உத்தரபிரதேச நீதிமன்றங்களில் சரமாரியாக வழக்குகளைத் தொடுத்தனர். தனிப்பட்ட விரோதத்திற்காக நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது சட்ட அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தும் செயல் என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இறுதியாக, அரசியலமைப்புச் சட்டம் 142-ன் கீழ் தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவர்களது திருமணத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. மேலும், இரு தரப்பினருக்கும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, இனிமேல் ஒருவர் மீது ஒருவர் எந்த ஒரு புதிய வழக்கையும் தொடரக்கூடாது என்று அதிரடித் தடை விதித்தது.

குடும்பத் தகராறுகள் குற்றவியல் வழக்குகளாக மாறும்போது சமரசத்திற்கான வாய்ப்பு குறைந்துவிடுவதாகவும், இத்தகைய தேவையற்ற சட்டப் போராட்டங்கள் நீதித்துறையின் பணிச்சுமையை அதிகரிப்பதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.