பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்த நான்கு மாணவிகள், ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தேர்வுக்கான அடையாள அட்டையைப் பெறச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய அந்த மாணவிகள், மீண்டும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கயா மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், அந்த மாணவிகளின் செல்போன் சமிக்ஞைகளை ஆய்வு செய்து அவர்கள் டெல்லியில் இருப்பதை உறுதி செய்தனர். டெல்லிக்கு விரைந்த காவல்துறையினர், அங்கு தங்கியிருந்த நான்கு மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர்.
அப்போது அங்கிருந்த மாணவிகளில் இருவர் தங்களது தோற்றத்தை ஆண்களைப் போல மாற்றிக் கொண்டு ஆண் உடைகளை அணிந்திருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், பள்ளிப் பருவத்திலேயே இவர்களுக்குள் நெருக்கமான நட்பு ஏற்பட்டு காதலாக மாறியதும், எதிர்காலத்தில் ஜோடிகளாக இணைந்து வாழத் திட்டமிட்டதும் தெரியவந்தது.
பெற்றோர்கள் இந்த உறவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற அச்சத்தினால் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மீட்கப்பட்ட மாணவிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
