நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. வேளாங்கண்ணி அருகேயுள்ள பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் தரணிதரன், தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்காகப் பள்ளியின் அருகிலுள்ள அரசு மாணவர் விடுதியிலேயே தங்கிப் படித்து வந்துள்ளார்.
வழக்கம்போல இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பள்ளிக்குச் செல்வதற்காகத் தரணிதரன் குளித்துள்ளார். கடும் குளிரில் குளிர்ந்த நீரில் குளித்ததால், உடல் நடுங்கியபடியே சீருடையை மாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாகத் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்துப் பதறிய விடுதி ஊழியர்கள், உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி வாய்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விடுதியில் தங்கிப் படித்த மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
