நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் அளிப்பதில் ஏற்பட்டுள்ள சட்டப் போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக, இந்தப் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் முடிவைத் தனி நீதிபதி ரத்து செய்து, உடனடியாக ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது. சான்றிதழ் பெறுவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்து நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பொங்கல் பண்டிகைக்கு ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் நடைமுறைகளில் கால தாமதம் ஏற்படுவதும், அதற்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தணிக்கை வாரியம் வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுவதாகப் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வரிசையில், தற்போது சென்சார் போர்டையும் தணிக்கை வாரியம் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஒரு புதிய ஆயுதமாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.
ஜனநாயகன் பட விவகாரத்தில் முதலமைச்சரின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
