உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது மனைவி பிரமிளா இடையிலான விவாகரத்து வழக்கில் கலிபோர்னியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும் தன்னையும் கைவிட்டு ஸ்ரீதர் வேம்பு இந்தியா சென்றுவிட்டதாகப் பிரமிளா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் திருமணத்திற்குப் பிறகு ஈட்டிய சொத்துகளில் தனக்கு சேர வேண்டிய பங்கைக் குறைக்க, தனது ஒப்புதல் இன்றி ஸ்ரீதர் வேம்பு சொத்துகளையும் பங்குகளையும் உறவினர்கள் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். கலிபோர்னியா சட்டப்படி கணவன் மற்றும் மனைவிக்குச் சொத்தில் சம உரிமை உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி அங்குள்ள நீதிமன்றத்தில் இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், மனைவி பிரமிளாவின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பிணையப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ஸ்ரீதர் வேம்புவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு உருவான சொத்துகள் இருவருக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா திரும்பிய பிறகு ஒருமுறை கூட மகனை வந்து பார்க்கவில்லை என்ற பிரமிளாவின் புகாருக்கும், சொத்து மாற்றக் குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்ரீதர் வேம்பு ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு இவ்வழக்கில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
