கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தி.மு.க. அரசு இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கடுமையாகச் சாடினார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், பக்தர்களின் உரிமையை நீதிமன்றமே உறுதி செய்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போட்டுத் தடுத்தது தவறு என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்காகப் பூரண சந்திரன் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தி.மு.க. அரசின் இரட்டை நிலைப்பாடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திருப்பூர் பெருமாநல்லூரில் முருகன் கோவிலை அறநிலையத்துறை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
பா.ம.க. கூட்டணியில் இணைந்தது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகவும் அவர் கூறினார். நடிகர் விஜய்க்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்றும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் விளக்கமளித்தார்.
