திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர்ச்சியடைய விரும்புவதும், அதிகாரத்தில் பங்கு கேட்பதும் நியாயமானது தான் என்று குறிப்பிட்ட அவர், இது தங்களின் நீண்ட கால விருப்பம் என்றும் கூறினார்.

திமுக ஒரு சிறந்த தோழமைக் கட்சி என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதாகவும் பாராட்டிய அவர், அதிகாரப் பகிர்வு தொடர்பாகத் தாங்கள் திமுகவிடம் பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும், தோழமையுடன் அணுகுவோம் என்றும் விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தற்போது விளிம்பு நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், தமிழகத்தின் உரிமைகளைப் பற்றிப் பேசும் வலிமையை அக்கட்சி இழந்துவிட்டதாகவும் விமர்சித்தார்.

மேலும் கூட்டணியைப் பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தெளிவான புரிதல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக கூட்டணியில் யார் தலைமை என்பது குறித்த குழப்பம் நீடிப்பதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யவில்லை என்றும், இதில் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுபவர்கள் தேர்தலுக்காகவே இத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.