வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த சம்பவத்தை முன்வைத்து, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் இந்தியாவைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அதிபரைக் கடத்திய அமெரிக்காவின் செயலை ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், இந்தியா பயந்து போய் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் மௌனம் காப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் விவகாரங்களைப் போலவே இதிலும் இந்தியா ஒதுங்கியிருப்பது கவலைக்குரியது என்று அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், வெனிசுலாவில் ஐநா சபையின் விதிகளுக்கு எதிராக ஒரு நாட்டின் அதிபரே கடத்தப்பட்டிருப்பது உலக நாடுகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

“இன்று வெனிசுலாவிற்கு நடந்த இந்த நிலை, நாளை இந்தியாவிற்கும் நடக்கலாம்” என்று அவர் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, எல்லை மோதல் குறித்த இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் பற்றியும் இவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்தியாவையும் வெனிசுலாவையும் ஒப்பிட்டுப் பேசியிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.