தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பட்டாயாவில், பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளுக்கும் இந்தியச் சுற்றுலா பயணி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பணத் தகராறு மோதலாக மாறியதில், அந்தச் சுற்றுலா பயணி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி அதிகாலை பட்டாயாவின் வாக்கிங் ஸ்ட்ரீட் பகுதியில் 52 வயதான ராஜ் ஜசுஜா என்ற இந்தியர், ஒரு திருநங்கையுடன் உல்லாசமாக இருக்கப் பேசிவிட்டு, பின்னர் பேசியபடி முழுத் தொகையைத் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்தத் திருநங்கை தனது தோழிகளை உதவிக்கு அழைக்கவே, அனைவரும் சேர்ந்து அந்த நபரைச் செருப்பால் அடித்தும் எட்டி உதைத்தும் கடுமையாகத் தாக்கினர். அவர் அங்கிருந்து காரில் தப்பிக்க முயன்றபோதும், அவரை வெளியே இழுத்துப் போட்டுத் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 

இந்தக் கும்பல் தாக்குதலில் ராஜ் ஜசுஜாவின் முகம் மற்றும் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அங்கு வந்த மீட்புக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த 19 வயது உள்ளூர் இளைஞர் அளித்த தகவலின் பேரில் பட்டாயா போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

காயமடைந்த இந்தியச் சுற்றுலா பயணி குணமடைந்த பிறகு அவரிடம் இருந்து முறையான புகார் பெறப்படும் என்றும், அதன்பிறகு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். பட்டாயா போன்ற சுற்றுலா இடங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.