உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் மிர்சாமுராட் பகுதியில் கடும் குளிர் காரணமாக 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, போர்வையினால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில், குழந்தையின் தாய் கடும் குளிரிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க தடிமனான போர்வையைத் தன்னோடு சேர்த்துப் போர்த்திக் கொண்டு உறங்கியுள்ளார்.
காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தை அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அது உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ராகுல் குமார் மற்றும் சுதா தேவி தம்பதியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை என்பதால், பெனிப்பூர் கிராமமே இந்த இழப்பால் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. குளிர்காலத்தில் பச்சிளம் குழந்தைகளைத் தடிமனான போர்வைகள் அல்லது மெத்தைகளைக் கொண்டு முழுமையாக மூடுவது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்படும்போது போர்வையைத் தானாக விலக்கும் அளவுக்குப் பலம் இல்லாதவர்கள் என்பதால், உறங்கும்போது குழந்தைகளின் முகத்தை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான மெல்லிய ஆடைகளை அணிவிப்பதே சிறந்தது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
