விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியைப் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் அந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்ற 42 வயது தொழிலாளி, சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். சிறுமியின் தந்தையுடைய ஆதார் அட்டையைக் கேட்பது போல நடித்து, அந்தச் சிறுமிக்கு அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரிடமிருந்து தப்பித்து அருகில் இருந்த வீட்டிற்கு ஓடிச் சென்று தஞ்சம் புகுந்துள்ளார். பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்த விவரங்களைக் கூறினார். இது குறித்து சிறுமியின் தாயார் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வேல்முருகனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.