வருகிற 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி சுமார் 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு வீரர்கள் இந்தியாவில் விளையாடக் கூடாது என உஜ்ஜைனியைச் சேர்ந்த மதத் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
“எங்கள் சகோதரர்கள் அங்கே கொல்லப்படும்போது, வங்கதேச வீரரை இங்கே விளையாட அனுமதிப்பதை ஏற்க முடியாது; அவர் விளையாடினால் மைதானத்தின் பிட்ச்சை தோண்டி எடுப்போம்” என அவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 16-ம் தேதி நடந்த ஏலத்தில், சிஎஸ்கே அணியுடன் கடும் போட்டி போட்டு முஸ்தஃபிசூரை கொல்கத்தா அணி வாங்கியது. ஆனால், தற்போது நிலவி வரும் அரசியல் பதற்றம் காரணமாக, அவர் இந்தத் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல்-லில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோன்ற தடையை வங்கதேச வீரர்களுக்கும் விதிக்க வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
“விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்” என ஒரு தரப்பினர் கூறினாலும், மதத் தலைவர்களின் இந்தத் தீவிர மிரட்டலால் ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முஸ்தஃபிசூரின் பங்கேற்பு குறித்து பிசிசிஐ (BCCI) எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
