நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் தவெக மற்றும் கொமதேக இடையே நேரடி மோதல் உருவாகியுள்ளது. தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் திருச்செங்கோட்டில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ ஈஸ்வரன் அவருக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார்.

தவெகவினர் வெறும் வாக்குகளைப் பிரிப்பது தனக்குச் சாதகமாகவே அமையும் என்றும், விவாதத்திற்குத் தயார் என்றால் அருண்ராஜ் மட்டுமல்லாமல் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்தையே அழைத்து வரலாம் என்றும் ஈஸ்வரன் அதிரடியாகக் கூறியுள்ளார்.

கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியே தங்களின் கொள்கை என்று குறிப்பிட்ட ஈஸ்வரன், விஜய் பேசுவதைப் பார்த்து அதிமுகதான் பயப்பட வேண்டும் என்றும், அவர் திமுகவை வீழ்த்த வரவில்லை, அதிமுகவின் இடத்தைப் பிடிக்கவே முயற்சிக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், பாஜகவின் அண்ணாமலையையே தான் விவாதத்திற்கு அழைத்தவன் என்று குறிப்பிட்ட அவர், அருண்ராஜ் எப்போது வேண்டுமானாலும் விவாதத்திற்கு வரலாம் எனத் தெரிவித்துள்ளார். தனி மாவட்டக் கோரிக்கைகள் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முடிவுகளை முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.