தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்தாவிலிருந்து யோக்யகர்த்தா நகரை நோக்கி 34 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

இன்று நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் செமரங் நகரின் கிராப்யாக் சுங்கச்சாவடி அருகே உள்ள வளைவான பாதையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவரில் பலமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தின் வேகம் காரணமாகப் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் நசுங்கியதுடன், பயணிகள் பலர் இரும்புச் சட்டங்களுக்கு இடையே சிக்கித் தவித்தனர்.

தகவலறிந்து சுமார் 40 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய தேடல் மற்றும் மீட்புக் குழுவினர், நசுங்கிய பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 19 பயணிகள் கரியாடி மற்றும் கொலம்பியா ஆசியா உள்ளிட்ட அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், அதிவேகமாகப் பேருந்தை இயக்கியதே விபத்திற்குக் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.