திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதேசமயம், மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்திக்கச் சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, அங்கிருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இளைஞர் பூர்ணசந்திரன் என்பவரின் இறப்பிற்கு மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத தமிழ்நாடு காவல்துறை சட்டவிரோதமாகச் செயல்படுவதாகவும், அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியலிடாத நிலையில் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தமிழக அரசின் செயல்பாடுகள் இந்துக்களுக்கு எதிராக இருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
