ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் 10 ரூபாய் தராத காரணத்திற்காக முதியவர் ஒருவர் 17 வயது சிறுவனால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த 50 வயது முதியவரான டாடாஜி என்பவர், இன்று அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த 17 வயது சிறுவன், மது வாங்குவதற்காக டாடாஜியிடம் 10 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அந்தச் சிறுவன் கேட்ட பணத்தைக் கொடுக்க டாடாஜி மறுத்ததால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டாடாஜியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த டாடாஜி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த டாடாஜியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்த இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய சிறுவனைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
