ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் தம்லவ் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மற்றும் அவரது மனைவி லட்பாய் ஆகியோருக்கு இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் தாளாத லட்பாய், வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துத் தனது கணவரைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மோகன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த லட்பாய், தானும் உயிரிழக்க முடிவெடுத்து அருகில் இருந்த கிராமத்துக் கிணற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், கிணற்றில் குதித்த லட்பாயை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து இன்று காலை தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று மோகனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கு முயன்ற லட்பாயிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவரைக் கோடாரியால் வெட்டிக்கொன்று மனைவி தற்கொலைக்கு முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
