சீனாவைச் சேர்ந்த 25 வயதான சாங் சூச்சியாங் என்ற உணவு விநியோக ஊழியர், தனது கடின உழைப்பால் ஐந்து ஆண்டுகளில் 1.12 மில்லியன் யுவான் (சுமார் 1.3 கோடி ரூபாய்) சேமித்து சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

2020-ம் ஆண்டு தான் நடத்தி வந்த காலை உணவு விடுதி நஷ்டமடைந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்க ஷாங்காய் நகரத்திற்கு இடம்பெயர்ந்த இவர், அங்கு டெலிவரி ஊழியராகச் சேர்ந்தார். ஒரு நாளைக்கு 13 மணிநேரம், வாரத்தின் ஏழு நாட்களும் ஓய்வின்றி உழைத்து, இதுவரை 3.24 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளார்.

தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்குத் தவிர வேறு எதற்கும் பணம் செலவழிக்காமல் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்ததால் மட்டுமே இவ்வளவு பெரிய தொகையைச் சேமிக்க முடிந்ததாக சாங் கூறுகிறார். இவருடைய விடாமுயற்சியைப் பார்த்த சக ஊழியர்கள் இவரை “ஆர்டர் கிங்” என்று அழைக்கின்றனர்.

தற்போது தனது கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்ட சாங், தான் சேமித்த பணத்தைக் கொண்டு அடுத்த ஆண்டு ஷாங்காயில் மீண்டும் இரண்டு உணவகங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.