தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த மறுநாள், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகளின் பட்டியலை அவர் அமித் ஷாவிடம் வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகள் (உதாரணமாக, மயிலாப்பூர், நாகர்கோவில், நெல்லை, கோவை வடக்கு, கோவை தெற்கு போன்றவை) பாஜகவுக்குச் சாதகமான தொகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் பாஜக நேரடியாக வெல்லக்கூடிய 50 தொகுதிகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் வெற்றி பெறக்கூடிய 15 தொகுதிகளும் அடங்கும். மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும்போது, இந்தப் பட்டியல் அதிமுகவிடம் வழங்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
