ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சண்டிமந்திர் கன்டோன்மென்ட் பகுதியில், ராணுவ அதிகாரியின் மனைவி ஒருவர் கூலிக்கு ஆட்களை அமர்த்தி, அப்பகுதியில் வசித்து வந்த தெரு நாய் ஒன்றைக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசித்து வந்த அந்தத் தெரு நாய், அப்பகுதி மக்களால் குடும்ப உறுப்பினரைப் போலவே பாசத்துடன் வளர்க்கப்பட்டு வந்தது.

 

டிசம்பர் 5ஆம் தேதி அந்த நாயின் உடல் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனது செல்ல நாயைக் குரைத்ததால் ஆத்திரமடைந்த ராணுவ அதிகாரியின் மனைவி தேப்மித்ரா அபிஷேக் பால் என்பவர், இரண்டு கூலி ஆட்களை அமர்த்தி அந்த நாயைக் கடத்திச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்துள்ளது.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 428 மற்றும் 429 பிரிவுகளின் கீழும், புதிய பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் 325 பிரிவின் கீழும், விலங்குகளைக் கொல்வது அல்லது துன்புறுத்துவது என்பது 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படக்கூடிய கடுமையான குற்றமாகும். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.