தென்காசி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கும், சாம்பவர்வடகரை பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமியின் மகள் உமா (வயது 31) என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், கோவிந்தராஜ் தனது மாமியார் ராமலட்சுமியின் வீட்டை பாட்டாகுறிச்சியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனுடன் வெளியூருக்குச் சென்ற கோவிந்தராஜ், மனைவியுடன் தொடர்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உமா, தாயின் வீட்டுக்கு வந்துள்ளார். ராமலட்சுமி கடனைத் திருப்பித் தர முயன்றும், மகேந்திரன் வீட்டைத் திருப்பித்தர மறுத்துள்ளார். இருதரப்பினரும் காவல்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை; நீதிமன்றம் மூலம் தீர்வு காணுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வீட்டை காலி செய்யுமாறு சிலர் மிரட்டியதாக உமா தனது தாயிடம் அழுது கூறியுள்ளார். மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த உமா, நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) தனது மகனுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் தர்ஷிக் முகுந்த் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். மகேந்திரன் உள்ளிட்டோர் மிரட்டியதாலேயே தன் மகள் தற்கொலை செய்துகொண்டதாக உமாவின் தாயார் ராமலட்சுமி சாம்பவர்வடகரை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
