நாம் தமிழர் கட்சியின் (நாதக) முன்னாள் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், தான் விரைவில் மீனவர் நலனுக்காகச் செயல்படும் கட்சி அல்லது அமைப்பில் இணையப்போவதாகத் தெரிவித்துள்ளார். அவர் நாதகவில் இருந்து விலகிய பிறகு, மீண்டும் திராவிடக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் காளியம்மாள். அவர் சீமானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் நாதகவிலிருந்து விலகினார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மயிலாடுதுறை மீனவர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் ஆதரவால், அவர் எந்தக் கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காளியம்மாள், தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் மீனவ மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும், சுனாமி வீடுகளைப் புதுப்பிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், கடற்கரை ஓரங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கி, மீனவர்களை அப்புறப்படுத்தப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, இனிவரும் காலங்களில் மீனவ அமைப்புகளை ஒன்றிணைத்து, மீனவர்களின் நலனுக்காகத் தொடங்கப்படும் கட்சி அல்லது அமைப்பில் இணைந்து செயல்படப் போவதாக அவர் கூறியுள்ளார்.
