குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் ஜம்பூசர் பகுதியில், வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி எருமை ஒன்று உயிரிழந்த நிலையில், அந்த எருமையில் பாலை அருந்திய சுமார் 35 கிராம மக்கள், தங்களுக்கு நோய் தொற்றும் அபாயம் இருப்பதாக அஞ்சி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். வெறிநாய் கடித்ததால் எருமைக்கு ரேபிஸ் ஏற்பட்டதுடன், அது இறந்த பிறகுதான் அதன் பாலைப் பயன்படுத்திய குடும்பங்களுக்கு இந்தத் தகவல் தெரியவந்தது.

இதனால், தங்களுக்கும் ரேபிஸ் நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவரும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காகச் சுகாதார மையத்தை நாடியுள்ளனர். பொதுவாக நாய் கடித்தால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதைக் கண்டிருப்போம். ஆனால், ஜம்பூசரில் எருமையில் பாலை அருந்தியதற்காகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் குவிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கையின்படி, ரேபிஸ் தாக்கிய விலங்குகளின் பாலைக் காய்ச்சாமல் அருந்தினால், கோட்பாட்டளவில் நோய் பரவ வாய்ப்புள்ளது. இருப்பினும், இது அரிதான நிகழ்வுதான் எனக் கூறப்படுகிறது. ரேபிஸ் ஒரு கொடிய நோய் என்பதால், அறிகுறிகள் தோன்றிய பிறகு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அந்த 35 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ரேபிஸ் தடுப்பூசியானது இறந்த வைரஸால் உருவாக்கப்படுவதால், அதனால் பக்கவிளைவுகள் பொதுவாக ஏற்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.