கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் பலியான துரதிர்ஷ்டவசமான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து நடிகர் அஜித்குமார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

அஜித்தின் கருத்து, ‘கூட்டத்தைக் கூட்டுவதில் உள்ள ஈடுபாடு’ உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும், சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியதுடன், ‘முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது’ என்றும் கூறியதால், இது விஜய்க்கு ஆதரவா, எதிர்ப்பா என்ற விவாதங்கள் எழுந்தன.

இந்தச் சூழ்நிலையில், அஜித் குமாரே விளக்கம் அளித்துள்ளார்: “கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது ஆந்திரா, பெங்களூரு எனப் பல இடங்களில் நடந்துள்ளது. பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும்… எனது பேட்டியை விஜய்க்கு எதிராகக் கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது… என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன், வாழ்த்தி இருக்கிறேன்” என்று கூறி, இரு நடிகர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த முயன்றவர்களின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
