வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆற்றைக் கடந்து விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்கள், எதிர்பாராத விதமாக ஆக்ரோஷமான யானை ஒன்றின் பிடியில் சிக்கிய திகில் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வையாளர்களை பதற வைத்துள்ளது. ஆற்றங்கரையில் டிப்பர் லாரியும், சிலரும் நிற்பதிலிருந்து தொடங்கும் இந்தக் காணொளியில், மூன்று சிறுவர்கள் ஆற்றைக் கடந்து வனப்பகுதிக்குள் ஓடுகின்றனர்.
View this post on Instagram
அப்போது, திடீரென அங்கு தோன்றிய பிரம்மாண்டமான யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் பிளிறியவாறு அவர்களைத் துரத்துகிறது. சிறுவர்கள் தவறுதலாக யானையின் எல்லைக்குள் அத்துமீறியதால் அது சீற்றம் அடைந்தது போல் தெரிகிறது. யானையின் இந்த திடீர் தாக்குதலைக் கண்டு அச்சமடைந்த சிறுவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
யானை துரத்தியதில் அதிர்ஷ்டவசமாகச் சிறுவர்கள் அதன் பிடியில் இருந்து தப்பித்த நிலையில், ஆக்ரோஷமாக விரட்டி வந்த யானை ஆற்றங்கரையை வந்தடைந்தது. அதேசமயம், ஆற்றில் தனது மோட்டார் சைக்கிளைச் சுத்தம் செய்துகொண்டிருந்த ஒரு நபர், யானை தன்னை நோக்கி வருவதைக் கண்டு பீதியடைந்து, உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்த காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.
இந்தத் திகிலூட்டும் காணொளியை ‘@afseena_anfar_vlogs’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், இரண்டு நாட்களிலேயே 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. சமூக ஊடகப் பயனர்கள் இந்தக் காணொளியை வேடிக்கையாக எடுத்துக் கொண்டாலும், யானையின் கோபம் வனவிலங்குகளுக்கு அருகில் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்ற எச்சரிக்கையை அழுத்தமாக உணர்த்துகிறது.
