ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏற்பட்ட வன்முறைப் போராட்டத்தில் 700 பேர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரின் வேட்புமனுவில் விதிகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுடன், அவர் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த சாமியா சுலுஹூ ஹாசன் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தன்னிச்சையான முடிவுக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மக்களின் இந்த எதிர்ப்புப் போராட்டம் படிப்படியாக கடுமையான வன்முறையாக மாறியது. தலைநகரம் மற்றும் முக்கியப் பகுதிகளில் வெடித்த இந்த வன்முறைச் சம்பவங்களில், இதுவரை 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரித்ததைக் கண்டித்து நடந்த இந்த வன்முறைச் சம்பவங்களால் தான்சானியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையும், ராணுவமும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
