இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள படுய் பழங்குடி மக்கள் ஒரு தனித்துவமான சமூகம். அவர்கள் பான்டென் மாகாணத்தில் உள்ள கானெகாஸ் கிராமத்திற்கு அருகில் வசிக்கின்றனர். இந்தப் பழங்குடியில் சுமார் 12,000 பேர் உள்ளனர், அவர்கள் சுண்டானீஸ் மொழி பேசுகின்றனர். தங்களை உலகின் முதல் மனிதர்கள் என்று கருதும் இவர்கள், இயற்கையுடன் இணைந்து வாழ்வதை விரும்புகின்றனர். மொபைல் போன், ரேடியோ, மின்சாரம் போன்ற நவீன வசதிகள் இங்கு இல்லை. கல்வி, மது அருந்துதல், செருப்பு அணிதல், நீரோட்டத்தை மாற்றுதல், நான்கு கால் விலங்குகளை வளர்த்தல் ஆகியவை தடைசெய்யப்பட்டவை.

கொலை, திருட்டு, பொய், போதை, இரவில் உணவு, வாகனம் ஓட்டுதல், பூ அல்லது வாசனை திரவியம் பயன்படுத்துதல், தங்கம் அல்லது வெள்ளி ஏற்றுக்கொள்ளுதல், பணத்தைத் தொடுதல், முடி வெட்டுதல் போன்றவை செய்தால் கிராமத்திலிருந்து வெளியேற்றப்படுவர். படுய் சமூகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது: வெளிப்புற படுய் மற்றும் உட்புற படுய். வெளிப்புறத்தில் நவீனத்துவம் சற்று நுழைந்துள்ளது, ஆனால் உட்புறத்தில் பாரம்பரியங்கள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன.

வெளி ஆட்கள் உட்புற கிராமத்திற்குள் செல்ல அனுமதி இல்லை. இவர்கள் வெள்ளை உடைகள் அணிந்து, நீண்ட தலைமுடி வைத்திருப்பர். மரக் கருவிகளால் விவசாயம் செய்து, அரிசி, சோளம் விளைவிக்கின்றனர். காடுகளிலிருந்து பழங்கள், காய்கறிகள் சேகரிப்பது அவர்களின் முக்கிய வாழ்வாதாரம். சுண்டானீஸ் இந்து பாரம்பரியமான சாங்கா சாரி நம்பிக்கையைப் பின்பற்றும் இவர்கள், இயற்கையை தெய்வமாக வணங்குகின்றனர். உட்புற படுய் மக்களிடம் மனதைப் படிக்கும் மற்றும் எதிர்காலத்தைச் சொல்லும் அற்புத சக்திகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘பூன்’ என்ற மதத் தலைவர்களுக்கு இறைவனுடன் நேரடித் தொடர்பு உள்ளது என்று நம்பப்படுகிறது. அவர்கள் மனதில் என்ன நடக்கிறது என்பதை எளிதாக அறிந்து, எதிர்காலத்தை முன்கூட்டி சொல்லலாம், விதியை மாற்றலாம். இயற்கை வழிபாடு, முன்னோர்களை நினைவுகூரும் சடங்குகள் செய்கின்றனர். வெளி ஆட்கள் இந்தச் சடங்குகளைப் பார்க்க அனுமதி இல்லை. டிராவல் வ்ளாகர் ஈசா கான் இந்தப் பழங்குடியின் வாழ்க்கை மற்றும் சக்திகள் பற்றிய வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார், இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.