‘கூலி’ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படமொன்று விரைவில் உருவாகவுள்ளது என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

லோகேஷ் கனகராஜ் இந்த மெகா படத்தை இயக்கப் போகிறார் என ஆரம்பத்தில் வதந்திகள் பரவிய நிலையில், ரஜினி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தான் நடிக்கவிருக்கும் புதிய படம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் இருக்கப்போகிறது என்றும், கமலுடன் இணைந்து நடிக்க ஆசை உண்டு, திட்டமும் இருக்கு, ஆனால் அதற்கான இயக்குநர் இன்னும் உறுதி ஆகவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, கமல்ஹாசனும் இதனை ஒரு மேடையில் உறுதிப்படுத்தினார். இதன் மூலம், லோகேஷ் கனகராஜ் அல்ல என்பது உறுதியான நிலையில், இந்த இயக்குனர் யார் என்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ படங்களை இயக்கி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் தான் இந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்று இணையத்தில் தகவல்கள் தீயாக பரவின.

இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நேரடியாக பதிலளித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “ரஜினிகாந்த் – கமல்ஹாசன் நடிக்கும் படத்தை நான் இயக்கவில்லை.

தற்போது நான் நடிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் அந்த வாய்ப்பு என்னிடம் வந்ததா? என்பதை பற்றி இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.

அவரது இந்த பதிலால், அவர் அந்த வாய்ப்புக்கான இயக்குநர் பட்டியலில் இருப்பது உறுதியாகி விட்டது என்பது ஊகிக்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை எந்த இயக்குனரேனும் முடிவு செய்ய முடியாது என்பதையும் மறக்கவே முடியாது.

தற்போது இணையத்தில் பரவி வரும் தகவல்கள் உண்மையா அல்லது வெறும் யூகமா என்பதை ஆராயும் வேலை ரசிகர்களிடையே தொடர்கிறது. ‘ரஜினி – கமல்’ காம்பினேஷனில் வெளியாகும் அடுத்த மெகா பிளாக் பஸ்டர் யார் இயக்கப்போகிறார் என்ற புதிர் தொடர்கிறது.