மும்பையில் சமையல்காரர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் சமையல் வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு வீட்டிலும் தினந்தோறும் சுமார் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார். அதற்குள் குடும்பத்தினர்கள் கேட்கும் அனைத்து உணவுகளையும் ருசியாக சமைத்து வைத்துவிட்டு மற்ற வீடுகளுக்கு செல்கிறார். இதன் மூலம் அவர் மாதம் தோறும் 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து மும்பையைச் சேர்ந்த ஆருஷி தோஷி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் என்னுடைய சமையல்காரரை மும்பை மகராஜ் என்றுதான் அழைப்பேன். அவர் எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு நன்கு தெரிந்தவர். அவர் தினமும் 12 வீடுகளில் வேலை செய்கிறார். ஒரு வீட்டுக்கு மாதந்தோறும் 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். யாரும் இவ்வளவு சம்பளம் கேட்பதில்லை. இது நம்ம முடியாததாக இருந்தாலும் அந்த அளவுக்கு கேட்பதற்கு தகுதியும் உடையவர்.

என்ன கேட்டாலும் அதை உடனே செய்து கொடுத்து அசத்தி விடுவார். இதனால் இவருக்கு தற்போது அதிக வீடுகளில் வேலைக்கு அழைக்கிறார்கள். தற்போது உள்ள நிலையில் நன்கு படித்தவர்கள் கூட இவ்வளவு சம்பளம் வாங்குவதில்லை. திறமையும், தன்னம்பிக்கையும் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கு இவரே உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.