நெல்லை மாவட்டத்தில் சமீப காலங்களாக கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்துடன் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் குழுவில் திமுக நிர்வாகியும், நெல்லை மாநகராட்சி கவுன்சிலரின் கணவருமான ஒருவர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது அந்தப் பதிவில், “மாநகராட்சி பணிகளுக்கு நிதி இல்லை என கூறும் அரசுக்கு, நாங்கள் பிச்சை எடுத்து தருகிறோம். எங்கள் வார்டுகளில் பணிகளை செய்ய தொடங்குங்கள்.

இல்லையெனில் ஓட்டு கேட்டு வெளியே போக முடியாது. என்னை நீங்கள் கட்சிக்கு எதிராக நினைத்தாலும் சரி, நானும் அதிமுகவை போல் திமுகவுக்கு எதிராக போஸ்டர் ஒட்ட வேண்டிய நிலை வரும். கடந்த 35 வருட காலமாக ஒரு பாலத்திற்கு போராடிக் கொண்டிருக்கிறோம். இதன் மூலமே நமது ஆட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை நீங்களே பாருங்க.

வரும் மாநகராட்சி கூட்டத்திற்கு முன் பாலத்தை முடித்து கொடுக்கவில்லை எனில் மக்களை ஒன்று திரட்டி சாக்கடையை கொண்டு வந்து மேலே ஊற்றி போராட்டத்தில் ஈடுபடுவேன். எனக்கு கட்சி முக்கியமல்ல, மக்கள் பணி தான் முக்கியம்”என எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெல்லை மாநகர திமுகவில் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களின் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.