திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, மா்ம நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சித் தகவல் வெளியானது.

அந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமி தற்போது மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறுமி அண்மையில் உடல்நிலை சற்று மேம்பட்ட நிலையில் வீடு அனுப்பப்பட்டதாயினும், முழுமையாக குணமடையாமலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போதும் சிறுமிக்கு தொடர்ந்து நரம்பியல் மற்றும் இதயவியல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிறுமியின் நிலைமை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆரம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளில், சிறுமியின் பின்னால் சென்றதோடு, பின்னர் சிறுமியை வழிவிட்டு கடத்திச் செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

காவல்துறையினருக்கு தற்போது கிடைத்துள்ள ஒரு புதிய புகைப்படத்தில் குற்றவாளியின் முகம் தெளிவாக இருக்கிறது. இதனை பொதுமக்கள் காணவும், தகவல் தரும் பொது சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கில், சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளி ஹிந்தியில் பேசும் நபராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குற்றவாளி எந்தவழியாக தப்பியோ, யார் என்று கண்டறிய ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், பல இடங்களில் தேடுதல் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற 10 நாள்களுக்கும் மேலாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது காவல்துறைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. சிறுமியின் உடல்நலமும், மனநலமும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே கோபமும், கவலையும் பெருகி வருகின்றன. குற்றவாளியை விரைவில் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.