மத்தியபிரதேச மாநிலம் சிதாவுனா கிராமத்தில் வசித்து வரும் 13 நபர்கள் நேற்று கன்வார் யாத்திரைக்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கன்வார் யாத்திரை என்பது இந்தியா மற்றும் நேபாளத்தில் நடைபெறும் ஒரு இந்து சமய யாத்திரை ஆகும்.

இதில் கங்கை போன்ற புனித நதிகளில் இருந்து நீரை எடுத்து அதனை கம்புகளின் இரு புறமும் தொங்கவிடப்பட்ட குடங்களில் நிரப்பி கொண்டு, அதனை தனது சொந்த ஊரில் உள்ள சிவாலயத்தில் இருக்கும் சிவனுக்கு அபிஷேகமாக சமர்ப்பிப்பது ஆகும். இந்த வருட யாத்திரையானது ஜூலை 11 ம் தேதி தொடங்கிய நிலையில் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதற்காக 13 பேர் சிதாவுனா கிராமத்திலிருந்து குவாலியர் ஷிட்லா மாதா நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் வந்த கார் ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென காரின் டயர் வெடித்தது. அதனால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்று கொண்டிருந்த யாத்ரீகர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3  யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். விபத்தைக் கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த சமயத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழந்த 4 பேரின் உடலையும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.