திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பாரதிதாசன் – தனலட்சுமி. இவர்கள் அப்பகுதியில் கட்டிட வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
அதில் முதல் மகன் சஷ்டிதரன் (13). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் சஷ்டிதரன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இதனை அடுத்து பெற்றோர்கள் வேலைக்கு சென்ற பின் வீட்டில் சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சஷ்டிதரன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அபோது எதிர்பாராத விதமாக சேலை சிறுவனின் கழுத்தில் சுற்றியுள்ளது. அதனை எடுக்க முடியாமல் சிறுவன் தவிர்த்து வந்துள்ளார். சேலை கழுத்தை தொடர்ந்து இறுக்கிறதால் சிறுவன் தொட்டிலிலேயே தொங்கியபடி கிடந்துள்ளார். மாலை பள்ளி முடிந்து திரும்பிய மகள் தம்பி தொட்டிலில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து பதறியடித்து அருகில் உள்ளவர்களிடம் ஓடிச் சென்று கூறியுள்ளார்.
உடனே அவரது தாய், தந்தைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தொட்டிலில் தொங்கிய சிறுவனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே மூச்சுத்திணறல் ஏற்பட்டுஉயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
