இறந்து போன மனைவி…. கணவரின் நெகிழ்ச்சியான செயல்…. ஓடோடி வந்து உதவிய போலீஸ்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் சங்கிவலசாவிலுள்ள மருத்துவமனையில் பங்கி என்பவர் தனது மனைவி குருவை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இதையடுத்து சிகிச்சையில் அவர் குணமடையாததால் மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறி விட்டனர்.

அதன்பின் பங்கி மருத்துவமனையிலிருந்து ஒரு ஆட்டோவில் தன் மனைவி குருவை ஏற்றிக்கொண்டு 100 கி .மீ தொலைவில் உள்ள ஒடிசா மாநிலம் சொராதா கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது போகும் வழியிலேயே குரு இறந்து விட்டார். இதனால் ஆட்டோ ஓட்டுநர், பங்கியையும் அவரது மனைவியின் உடலையும் வழியிலேயே இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

பின் செய்வதறியாது திணறிய பங்கி, மனைவியின் உடலை தோளில் சுமந்தவாறு தன் ஊரை நோக்கி நடந்தார். இதை பார்த்த பொதுமக்கள், உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் பங்கியிடம் விசாரித்து அவருக்கு வாகனம் ஏற்பாடு செய்துகொடுத்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் பங்கி மனமார்ந்த நன்றியை தெரிவித்துவிட்டு சொந்த ஊர் நோக்கிப் புறப்பட்டார்.