“ஒன் லைன் கேட்டபோதே படத்தில் நடிக்க முடிவு செஞ்சுட்டேன்”… தளபதி67-ல் நடிக்கும் சஞ்சய் தத்..!!!!

ஒன் லைன் கேட்டபோது தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்ததாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய் நடிப்பில் சென்ற 11ஆம் தேதி ரிலீசான வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம் வெளியான 11 நாட்களில் 250 கோடி வசூல் செய்ததாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பமானது.

இந்த படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா வேடம் எனவும் அவருக்கு வில்லனாக ஆறு முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இதனால் விஜய் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் கதாபாத்திர புகைப்படங்கள் வெளியானது. அதன்படி இத்திரைப்படத்தில் நடிக்கும் கௌதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், நடிகை பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்டோரின் கதாபாத்திர புகைப்படம் வெளியானது.

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சஞ்சய்தத் கேஜிஎப் 2 திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்த அவரின் நடிப்பு மிரட்டலாக இருந்த நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் ஒன் லைன் கேட்டபோது ஒரு பகுதியாக தானும் இருக்க வேண்டும் எனவும் அதற்கு சரியான தருணம் இதுதான் எனவும் தோன்றியதாக தளபதி 67 பயணம் குறித்து ஆர்வமாக இருப்பதாகவும் சஞ்சய் தெரிவித்ததாக போஸ்டரில் அச்சிடப்பட்டு இருக்கின்றது.