சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்… நடவடிக்கை எடுக்கப்படுமா…? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் 32 ஊராட்சிகளும்  92 கிராமங்களும் இருக்கின்றது. இதில் கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியை நம்பியே இருக்கின்றார்கள். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் புதுமனை புகுவிழா, காதணி விழா, திருமணம், வளைகாப்பு, துக்க நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது அண்மைகாலமாகவே அதிகரித்து இருக்கின்றது.

இதற்கு காரணம் குறைந்த வாடகை என்பதால் அதிகம் சரக்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்து விசேஷ நிகழ்ச்சிக்கு பயன்படுத்துகின்றார்கள். அப்படி செல்லும்போது அதிக அளவு ஆட்களை ஏற்றுவது, வாகனங்களில் தாறுமாறாக ஏறி ஆபத்தான முறையில் அமர்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இப்படிப்பட்ட செயல்களால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனையை தெரிவிக்கின்றார்கள். இதற்கு போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தாலும் இது போலவே தொடர்ந்து பயணம் மேற்கொள்கின்றார்கள். ஆகையால் சரக்கு வாகனங்களை பயன்படுத்தி பயணிகள் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.