8 குண்டுகள்…. 215 உயிர் பலி ….. 500 பேர் சிகிச்சை …… ஊரடங்கு உத்தரவில் இலங்கை….!!

இலங்கையில் தேவாலயங்கள்மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து வெடித்த தொடர் குண்டு வெடிப்பில் எண்ணிக்கை 215ஆக உயர்ந்தது.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என  குண்டு வெடித்தது.

பின்னர் மாலையில் கொழும்பு புறநகரில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்ததில் 2 பேரும் ,  உருகொடவட்டாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, அங்கே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி வெடிக்கச் செய்ததில் 3 போலீசார் பலியானார்கள். இப்படி அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, டென்மார்க், ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களோடு சேர்த்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 215_ஆக அதிகரித்துள்ளது.

500_க்கும் மேற்பட்டோர் அங்குள்ள கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இந்த   தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசாங்கம் பிறப்பித்துள்ளது . தேவாலயங்கள் , முக்கிய பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.